தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மலேசியாவில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1999ஆம் ஆண்டு, அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், கைதானவருக்கு தொடர்புடையவர்களாக கருதப்படும், மேலும் 4 பேர், செர்ந்தாங், செண்ட்டுல், சுங்காய் பெஸி மற்றும் மத்திய கோலாலம்பூரிலிருந்து கைது செய்துள்ளதாக மசேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், மே 15- ம் தேதி, இதே சந்தேகத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 7 பேரும் மலேசியாவில் பதுங்கியிருந்து இலங்கை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்களா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது பற்றி மலேசியக் காவல்துறை தலைமை ஆய்வாளர் கலீத் அபு பக்கர் கூறுகையில், "4 பேரில் ஒருவர் 1999ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வருபவர். இவர்களிடமிருந்து போலி பல பாஸ்போர்ட்டுகளை நாங்கள் கைப்பற்றி உள்ளோம். அதில் குடியுறுமைத்துறையின் போலி முத்திரைகள் பதிக்கப்பட்டிருந்தன" என்றார்.
மே மாதம் கைது செய்யபப்ட்ட மூன்று பேரும், விடுதலை புலிகளின் இயக்கத்தில் உள்ள அனைவரும் மதிக்கத்தக்கவர்களாக இருந்ததாக ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் பதுங்கி விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், சதி திட்டம் நடத்தி வருவதாக மலேசிய அரசுக்கு வந்த புலனாய்வு தகவலை அடுத்து, கடந்த சில மாதங்களாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மலேசிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.