சீன வானொலியின் (ரேடியோ பெய்ஜிங்) புகழ்பெற்ற இந்தி அறிவிப்பாளரும், சீனாவில் நீண்ட காலமாக வசித்து வரும் இந்தியருமான ஷ்யாமா வல்லப் (76) அந்நாட்டில் திங்கள்கிழமை காலமானார்.
கடந்த சில காலமாக ஷ்யாமா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஜானகி வல்லப் (83) என்கிற கணவரும், அகில், அதுல் தலகோட்டி என்கிற 2 மகன்களும் உள்ளனர். இந்தி மொழி அறிஞரும், சீனாவின் வெளிநாட்டு மொழிகள் அச்சகத்துடன் (எப்எல்பி) நீண்டகாலத் தொடர்பில் இருந்தவருமான தனது கணவர் ஜானகியுடன் 1958-ம் ஆண்டு பெய்ஜிங் வந்தார் ஷ்யாமா.
மாசே துங் சித்தாந்த நூல்களை இந்தியில் மொழி பெயர்த்தார் ஜானகி. மேலும் பிற இந்தி அறிஞர்களுடன் சேர்ந்து சீனாவின் புகழ்பெற்ற 16-ம் நூற்றாண்டு காப்பிய நாவலான ‘தி ஜர்னி டு தி வெஸ்ட்’-ஐ இந்தியில் மொழி பெயர்த்தார்.
1962 போருக்கு முன் ‘ரேடியோ பெய்ஜிங்’-ல் இந்தி அறிவிப்பாளராக பணியாற்றினார் ஷ்யாமா. 1977-க்குப் பிறகு இந்தி மொழியில் எப்எல்பி பிரசுரம் செய்த குழந்தைகளுக்கான சித்திரக் கதை வெளியீடுகளுக்கு ஆசிரியராக பணியாற்றினார் ஷ்யாமா.
1962 சீனா- இந்தியப் போர் காலகட்டத்தை தவிர ஜானகி – ஷ்யாமா தம்பதியர் பெரும்பாலும் பெய்ஜிங் நகரிலேயே வசித்தனர். எப்எல்பி மற்றும் ரேடியோ பெய்ஜிங் நிறுவனங்களுக்காக பணியாற்றினர். ரேடியோ பெய்ஜிங் பின்னர் ‘சீனா ரேடியோ இன்டெர்நேஷனல்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இருவரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் இரண்டாவது மகன் அதுல் தலகோட்டி ‘ரிலையன்ஸ் சீனா’ தலைவராகவும், 'ஃபிக்கி – சீனா’ செயல் இயக்குநராகவும் உள்ளார்.