பென் எஸ். பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் (இடமிருந்து வலமாக) 
உலகம்

பொருளாதார நோபல் பரிசுக்கு அமெரிக்க அறிஞர்கள் மூவர் தேர்வு

செய்திப்பிரிவு

நார்வே: 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் ஆகிய மூன்று அறிஞர்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்கு, குறிப்பாக நிதிச்சுழல் நேரங்களில் வங்கிகளின் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிதிச் சந்தைகள் மேலாண்மை குறித்தும் இவர்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் 1968-ஆம் ஆண்டில் ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு என்ற பெயரில் ஆல்ஃப்ரட் நோபல் நினைவாக பரிசு அறிவிக்கப்பட்டது. 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதே நடைமுறைகளைப் பின்பற்றி தி ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங் ப்ரைஸ் The Sveriges Riksbank Prize வழங்கப்படுகிறது. இந்த விருதினை முதன்முதலாக ராக்னர் ஃப்ரிஸ்ச் மற்றும் ஜான் டின்பெர்ஜென் என்ற பொருளாதார அறிஞர்கள் பெற்றனர். 1969-ல் முதல் இந்த விருது வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT