கோப்புப்படம். 
உலகம்

கிரீமியா பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்: உக்ரைனுக்கு எதிராக போரிட புதிய தளபதியை நியமித்தது ரஷ்யா

செய்திப்பிரிவு

மாஸ்கோ: உக்ரைனின் கிரீமியா தீப கற்ப பகுதியை 2014-ம் ஆண்டில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதன்பின் 2018-ம் ஆண்டில் ரஷ்யாவையும் கிரீமியாவையும் இணைக்க கெர்ச் ஜலசந்தியில் 19 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல 4 வழிச் சாலையும், இரட்டை ரயில் பாதையும் உள்ளன. நடுவில் கப்பல்கள் கடந்து செல்ல தூக்கு பாலம் வசதியும் உள்ளது. கடந்த 8-ம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி பாலத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. சரக்கு ரயிலின் 7 எரிபொருள் டேங்கர்கள் எரிந்து நாசமாகின.

சேதமடைந்த பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. ரயில் போக்குவரத்து எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறுகிறது. உக்ரைன் போர் காரணமாக கிரீமியா பகுதி பயணிகள் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இணைப்பு பாலம் சேதமடைந்திருப்பதால் விமான நிலையம் திறக்கப்பட்டு பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

17 பேர் உயிரிழப்பு

ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 228-வது நாளாக போர் நீடித்தது. இந்த சூழலில் உக்ரைனுக்கு எதிரான போரை வழிநடத்த ஜெனரல் செர்ஜி சுரோவிகின் என்பவரை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று முன்தினம் நியமித்தது. இதனால் போர் தீவிரமடையும் என தெரிகிறது.

இதுகுறித்து ரஷ்ய வட்டாரங் கள் கூறும்போது, “இதுவரை உக்ரைனின் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தோம். ஆனால் உக்ரைன் ராணுவம் தீவிரவாதிகளின் பாணியில் ரஷ்யாவின் பயணிகள் போக்குவரத்து பாலத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் பொது பயன்பாட்டுக்கான கட்டமைப்புகள் மீது தீவிரதாக்குதல் நடத்துவோம்" என்று தெரிவித்தன.

கிரீமியா பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைனின் ஜாபோரிஷியா பகுதியை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. இதில் 50 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்தன. 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT