உலகம்

மோசூல் விரைவில் மீட்கப்படும்: இராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி உறுதி

செய்திப்பிரிவு

இராக்கின் மோசூல் நகரம் விரைவில் மீட்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி தெரிவித்துள்ளார்.

இராக் தலைநகர் பாக்தாதில் இருந்து 400 கி.மீ. தொலைவில் மோசூல் நகரம் உள்ளது. அந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரான மோசூலை 2014 ஜூன் 10-ம் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோசூலை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இராக் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க கூட்டுப் படைகளின் பின்னணி பலத்தால் இராக் படை, குர்து படை, ஷியா படை ஆகியவை தற்போது மோசூல் நகரை சுற்றி வளைத்துள்ளன.

மோசூலில் தற்போது 5 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இராக் படைகள் போரிட்டு வருகின்றன. இதுதொடர்பாக இராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி தொலைக்காட்சியில் பேசியதாவது:

மோசூல் நகரை நெருங்கிவிட்டோம். நகரின் மையப்பகுதிக்கும் இராக் படைகளுக்கும் இடையே ஒரு கி.மீட்டர் தொலைவே உள்ளது. இன்னும் சில நாட்களில் அந்த நகரம் மீட்கப்பட்டு காட்டாட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் சரண் அடைய வேண்டும். இல்லையெனில் அவர்களது மரணம் உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோசூல் நகரில் சுமார் 5 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளனர். அவர்களில் 1000 பேர் வெளிநாட்டினர். மோசூலை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஐ.எஸ். அமைப்பு கடுமையாகப் போரிட்டு வருகிறது.

தாக்குதலில் இருந்து தப்பிக்க போர் முனையில் பொதுமக்களை மனித கேடயங்களாக ஐ.எஸ். அமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. மோசூல் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பான பகுதி களுக்கு குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT