சீனாவில் வசிக்கும் ஸியாலி, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். வீட்டுக்கு மூத்த மகள். அவரது பெற்றோர் வயதானவர்கள் என்பதால், சொந்தமாக ஒரு வீட்டை வாங்கும்படி ஸியாலியை வற்புறுத்தி வந்தனர். பணம் இல்லாமல் எப்படி வீடு வாங்க முடியும் என்று யோசித்தவர், ஓர் உத்தியைக் கையாண்டார்.
20 ஆண்களைக் காதலித்து, 20 ஐபோன்களைப் பரிசாகப் பெற்றார். அத்தனை போன்களையும் விற்று, வீட்டுக்கான டவுன்-பேமண்ட் செலுத்தி, வீட்டை வாங்கிவிட்டார். அலுவலகத்தில் வேலை செய்யும் சில நண்பர்களைப் புது வீட்டுக்கு அழைத்தார் ஸியாலி. அங்கே தனக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்ற விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். விஷயம் அலுவலகம் முழுவதும் பரவிவிட்டது.
ஸியாலியின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், இந்த விஷயத்தைத் தன்னுடைய வலைப்பூவில் எழுதிவிட்டார். சீனா முழுவதும் ஊடகங்களில் இந்த விஷயம் வேகமாகப் பரவிவிட்டது. பெண்ணின் நலன் கருதி, பெயர் மாற்றப்பட்டுள்ளதால், ஸியாலியின் பெற்றோருக்கு இதுவரை விஷயம் தெரியவில்லை. சர்வதேச ஊடகங்கள் ஸியாலியைத் தொடர்புகொள்ள முயன்றும் அவர் வேலை செய்யும் அலுவலகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
சரி, காதலர்களுக்கு என்ன சொல்லப் போகிறார் ஸியாலி?
ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனை வெளியிட்ட ஓர் அறிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 30 வயதான ஒரு பெண்ணுக்கு, கருப்பையில் லேசர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது திடீரென்று நெருப்புப் பிடித்துக்கொண்டது. நெருப்பை அணைப்பதற்குள் பெண்ணின் இடுப்பு, கால்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.
இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், அறுவை சிகிச்சை செய்யும் அறையில் எரியக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்றும், குடலில் இருந்து வெளியேறிய வாயுவால் ஏற்பட்ட திடீர் நெருப்பு என்றும் தெரிய வந்திருக்கிறது.
ஐயோ… பாவமே…
அமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் பிரையன் ஆடம்ஸ், தன்னுடைய 80 வயது அம்மா இறந்து போன விவரத்தை உறவினருக்கோ, அரசாங்கத்துக்கோ தெரிவிக்கவில்லை. தன் வீட்டுத் தோட்டத்திலேயே சடலத்தைப் புதைத்துவிட்டார்.
கடந்த ஓராண்டு காலமாக அம்மாவின் ஓய்வூதியத் தொகையைப் பெற்று வந்திருக்கிறார். அரசாங்கத்தில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற்றது. பிரையன் ஆடம்ஸ் வீட்டைப் பரிசோதனை செய்தபோது, உண்மை தெரியவந்தது.
இறந்து போன அம்மாவின் பெயரைப் பயன்படுத்தி இதுவரை 23 லட்சம் ரூபாயைப் பெற்றிருக்கிறார் பிரையன் ஆடம்ஸ். உடனே கைது செய்யப்பட்டார். அவருக்கு குறைந்தது 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றத்துக்காகத் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்…