அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர் பாக பேஸ்புக் கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு வருகிறது என அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது அவர் பேசியதாவது;
பேஸ்புக்கை மக்கள் எந்த அளவுக்கு அதிகமாக கண்டு களித்து வருகிறார்களோ, அந்த அளவுக்கு சமூக வலைத் தளங் களில் பதிவாகும் செய்திகளும் மக்களை நம்ப வைக்கின்றன. இதனால் முட்டாள்தனங்களும் உருவாகின்றன. இந்தத் தேர்தல் குறித்து சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு வருகிறது. இதை மக்கள் ஒருபோதும் நம்பக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அண்மை யில் நடத்தப்பட்ட விசாரணையில் பேஸ்புக்கில் 38 சதவீதம் வரை பொய்யான அல்லது தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட் டிருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக டிரம்புக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட புதிய கட்டுக்கதைகள் எப்படி வைரலாக பரவியது என்பதும், இதனை மெசிடோனியாவைச் சேர்ந்த இளம் வயதினர் பரப்பி விட்டிருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது.