டெல்லியில் பணியாற்றும் 4 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணி யாற்றியவர் மெகமூத் அக்தர். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக தொடர்ந்து உளவு பார்த்து வந்தார். இந்திய ராணுவ ரகசியங்களை திருடி ஐஎஸ்ஐ அமைப்புக்கு அளித்துள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்த மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கீர் ஆகியோர் இந்திய ராணு வம் குறித்த ரகசிய ஆவணங்களை பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தரிடம் அண்மையில் அளித்தனர். அவர்கள் 3 பேரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து மெகமூத் அக்தர் இந்தியாவைவிட்டு வெளியேற்றப்பட்டார். இதற்குப் பதிலடியாக இந்திய தூதரக அதிகாரி ஒருவரை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் 4 அதிகாரி களை திரும்பப் பெற அந்த நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி சையது பரூக் ஹபீப், காதீம் ஹுசைன், மதாசீர் சீமா, ஷாகித் இக்பால் ஆகியோர் திரும்ப அழைக்கப்படலாம் என்று பாகிஸ்தானின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தர் அளித்துள்ள பேட்டியில், இந்திய போலீஸார் தன்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக குற்றம் சாட்டி யுள்ளார்.