சீனாவின் வடகிழக்கில் வசிக்கும் 60 வயது மா, உருளைக்கிழங்கு விவசாயி. இந்த ஆண்டு அவரும் அவருடைய குடும்பத்தினரும் 40 டன் உருளைக்கிழங்குகளை விளைவித்தனர். ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் அதிக அளவில் உருளைக்கிழங்குகளை விற்பனை செய்வதற்கோ, பாதுகாப்பதற்கோ வசதி இல்லை. அதனால் 32 டன் உருளைக்கிழங்குகளை எடுத்துக்கொண்டு, 4 பகல் 4 இரவு பயணம் செய்து, 2500 மைல்களைக் கடந்து ஷென்ஜென் நகருக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே உள்ள பெரிய வணிகச் சந்தையில், மாவின் உருளைக்கிழங்குகள் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி, ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். நிலைகுலைந்து போனார் மா. உழைப்பையும் விளைச்சல், போக்குவரத்துக்கான செலவுகளையும் எண்ணி நிம்மதி இழந்தார். வேறு வழியின்றி, சாலை ஓரத்தில் உருளைக்கிழங்குகளை இறக்கி வைத்தார். அந்தச் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது என்பதால், மிகக் குறைவாகத்தான் விற்பனையானது.
மாவின் இக்கட்டான நிலையை அறிந்த சிலர் தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லி உருளைக்கிழங்குகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். அதிலும் பெரிய அளவில் விற்பனை இல்லை.
ஒரு சிலர் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் தகவலை வெளியிட்டனர். ஷென்ஜென் நகர் முழுவதும் இந்தச் செய்தி பரவியது. ஏராளமான மக்கள் உருளைக்கிழங்கு இருக்கும் பகுதியை நோக்கி ஓடிவந்தனர்.
இரண்டு நாட்களில் மாவின் கதை ஒரு கட்டுரையாக இணையதளத்தில் வெளிவந்தது. மறுநாள் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உருளைக்கிழங்குகளை வாங்கிச் சென்றனர்.
“நாங்கள் எல்லோருமே ஒரு விவசாயி கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே தொலைதூரத்தில் இருந்து வந்து, வாங்கிச் செல்கிறோம். ஏதோ எங்களால் முடிந்த சிறு உதவி” என்கிறார் ஜிங்பின். “இந்த உருளைக்கிழங்குகளை மீண்டும் அவ்வளவு தூரத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது. பணத்துடன் வருவேன் என்று காத்திருக்கும் குடும்பத்துக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ஆனால் முன்பின் அறியாத ஒருவனுக்கு, ஷென்ஜிங் மக்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை” என்கிறார் மா.
ஒரு விவசாயியின் துயர் துடைத்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி!
விண்வெளி வீரர்கள் உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பங்களைக் கையாளுகிறார்கள். ஆனால் மனிதக் கழிவு மேலாண்மைக்கு டயபர்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். விண்கலத்துக்குள் விண்வெளி உடை அணியாதபோது, கழிவுகளைக் கையாள்வதற்குச் சிறந்த வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் விண்வெளி உடையோடு பூமியில் இருந்து கிளம்பும்போதும் தரையிறங்கும்போதும் விண்வெளியில் நடக்கும்போதும் டயபர்கள் அசெளகரியத்தைக் கொடுக்கின்றன.
அதனால் டயபர்களை விட இன்னும் மேம்பட்ட வழிமுறையை எதிர்பார்க்கிறது நாசா விண்வெளி ஆய்வு மையம். சிறந்த யோசனையை அளிப்பவருக்கு 20.5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்திருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதிக்குள் யோசனைகளை வழங்க வேண்டும்.
ஐடியா கொடுங்க, பரிசை வெல்லுங்க!