தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரானின் மேற்கில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்குச் சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது.
போராட்டத்தில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரானில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு சமூக வலைதளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவைகள் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அங்கு நிகழும் போராட்டங்களை பகிர முடியாத நிலையில் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஈரானில் டீசல் விலை உயர்வுக் காரணமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நாடு முழுவதும் நடந்தது. அதனைக் கட்டுப்படுத்தவும் சமூக ஊடகங்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.