உலகம்

ஹாங்காங்கில் பிரம்மாண்ட ஜனநாயக ஆதரவு பேரணி: போலீஸ் உத்தரவை ஏற்க மறுத்த 511 பேர் கைது

செய்திப்பிரிவு

ஹாங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட ஜனநாயக ஆதரவு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் போலீஸ் உத்தரவை ஏற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்திய 511 பேர் கைது செய்யப்பட்டனர். பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் கடந்த 1997, ஜூன் 1-ம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹாங்காங்கை சீனா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டபோது அதற்கு அதிகபட்ச சுயாட்சி வழங்கப்படும் என உறுதியளித்தது. ஆனால் அவ்வாறு வழங்கப்படாததால், அதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பேரணி நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் இதுவரை இல்லாத அளவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேரணியின் இறுதியில் ஹாங்காங் நகரின் வர்த்தக பகுதியில் இரவு முழுவதும் சாலையில் அமர்ந்த மக்கள், அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ஹாங்காங் தேர்தல்களில் சீனாவின் கட்டுப்பாடுகள் தொடர்வதற்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மறுநாள் காலை 8 மணி வரை இப்போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்காத போலீஸார், அதிகாலை 3 மணியளவில் அனைவரையும் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனை போராட்டக்காரர்கள் ஏற்காததால், அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றத் தொடங்கினர். இதில் போலீஸ் உத்தரவை ஏற்க மறுத்த 511 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள்.

இப்பேரணியில் 98,000 பேர் பங்கேற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில், 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதே சமயம் இப்பேரணியில் 1,54,000 முதல் 1,72,000 பேர் பங்கேற்றிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்பேரணியும், பேரணியில் பங்கேற்றவர்களின் கொந்தளிப்பும் சீனாவுக்கு எச்சரிக்கையாக இருப்பது உறுதி என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT