அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஹிலாரி கிளின்டன் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சர்ச்சைக்குரிய விஸ்கான்சின், மிக்ஸிகன், பெனிஸ்வேனியா மாகாணங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும் போட்டி யிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு முறையில் தேர்தல் நடத்தப்படு கிறது. வாக்குச் சீட்டு முறை, வாக்கு இயந்திர முறை, இ-மெயிலில் ஓட்டு களை என பல்வேறு நடைமுறை கள் பின்பற்றப்படுகின்றன.
விஸ்கான்சின், மிக்ஸிகன், வெனில்வேனியா ஆகிய 3 மாகாணங்களில் கணினி உதவி யுடன் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மாகாணங்களில் வாக்கு இயந்திரத்தை ஹேக்கிங் முறை யில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு முறைகேடு செய்திருக்கலாம் என்று கணினி நிபுணர்கள் தெரி வித்துள்ளனர்.
மூன்று மாகாணங்களிலும் ஹிலாரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே குறிப்பிட்ட 3 மாகாணத்தில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று ஹிலாரி கிளின்டன் அணியினர் வலியுறுத்தியுள்ளனர். இதே குற்றச்சாட்டை கிரீன் கட்சி அதிபர் வேட்பாளர் ஜில் ஸ்டீனும் முன்வைத்துள்ளார்.
எனவே மறுவாக்கு எண்ணிக்கை கோரி ஹிலாரி அணி மற்றும் கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் முறைப்படி விண்ணப்பிக்கக்கூடும் என்று அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
இதுகுறித்து ஹிலாரி அணியின் பிரச்சார குழுவின் மூத்த தலைவர் ஜான் போடஸ்டா கூறியபோது, தேர்தலுக்கு முன்பாக எனது இ-மெயில் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டன. இதே போல தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெற்றிருக்க அதிக வாய்ப்பு கள் உள்ளன என்று தெரிவித்தார். எனினும் இந்த விவகாரம் தொடர் பாக ஹிலாரி கிளிண்டன் இது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.