உலகம்

ஐ.எஸ். பிரச்சார குழுத் தலைவர் கொல்லப்பட்டது உறுதியானது

ராய்ட்டர்ஸ்

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரச்சார குழுத் தலைவரான அதில் ஹசன் சல்மான் அல்- ஃபயாத் அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டது உறுதியானது.

இதை ஐ.எஸ். வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகமான பென்டகன், அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சிரியாவின் ரக்கா மாகாணத்தில் அவர் கொல்லப்பட்டதாக ஏற்கெனவே கூறியிருந்தது.

இதுகுறித்து ஐ.எஸ். இணையத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அபு மொஹம்மது அல்- ஃபர்கான் என்று அழைக்கப்படும், ’வாயில் அதில் ஹசன் சல்மான் அல்- ஃபயாத்’துக்கு தீவிரவாதிகள் குழு அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அந்த அறிக்கையில், அவர் எங்கே, எப்படி, எப்பொழுது இறந்தார் என்பது தெரிவிக்கப்படவில்லை.

கடந்த மாதம் 7-ம் தேதி, சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் அல்- ஃபயாத் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

ரக்கா மாகாணத்தில் இருந்த தன்னுடைய வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே வரும்போது அவர் கொல்லப்பட்டார் எனவும், அவர் ஐ.எஸ். தகவல் தொழில்நுட்பத்துறை தலைவராகவும், ஐ.எஸ். அமைப்பின் ஒட்டுமொத்த இணைய வழிப் பிரச்சாரத்துக்கான மூளையாகவும் செயல்பட்டார் எனவும் பென்டகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT