உலகம்

உலக மசாலா: உலகின் விலை மதிப்புமிக்க உருளைக் கிழங்கு சிப்ஸ்!

செய்திப்பிரிவு

உலகின் மிக விலை மதிப்புமிக்க உருளைக் கிழங்கு சிப்ஸை உருவாக்கியிருக்கிறது ஸ்வீடனைச் சேர்ந்த மதுபான நிறுவனம். ‘ஸ்வீடனின் முன்னணி மதுபான நிறுவனங்களில் ஒன்று செயிண்ட் எரிக்ஸ். விலை உயர்ந்த மதுபானங் களை மட்டுமே நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் மதுவுக்கு இணையான நொறுக்குத்தீனி இருக்க வேண்டும் என்பதற்காகவே, உலகின் விலையுயர்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸை உருவாக்கியிருக்கிறோம்.

அழகான பெட்டியில் 5 உருளைக்கிழங்கு சிப்ஸ் மட்டுமே வைக்கப்பட்டி ருக்கின்றன. ஒரு துண்டின் விலை 736 ரூபாய். 5 துண்டுகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை 3,746 ரூபாய். சிப்ஸில் சேர்க்கப் படும் 5 பொருட்களை 5 நாடுகளில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம்.

பாதாம் உருளை என்ற அரிய வகை உருளைக்கிழங்கைப் பயன்படுத்துகிறோம். உலகின் முன்னணி சமையல் கலைஞர் தன் கரங்களால் இந்த சிப்ஸை உருவாக்கி இருக்கிறார். அதனால் தான் இவ்வளவு விலை வைக்க வேண்டியதாகிவிட்டது. விலை அதிகமாக இருப்பதால் மக்கள் விரும்புவார்களா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உயர்தரமான மதுவை அருந்துபவர்கள், உயர்தரமான நொறுக்குத்தீனியையும் ஆதரிக்கிறார்கள். தொடர்ந்து உருளைக் கிழங்கு சிப்ஸை உருவாக்க முடிவு செய்திருக்கிறோம்’ என்கிறார் மேனேஜர் மார்கஸ் ஃப்ரையாரி.

ஒரு துண்டு சிப்ஸ் 736 ரூபாய் ரொம்பவே அநியாயம்…

சீனாவின் புகழ்பெற்ற பெரிய வணிக நிறுவனம் ஐகேஇஏ. வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் கட்டில், அலமாரி, சோபா விற்பனையைப் பெரிய அளவில் ஆரம்பித்தது. இங்கே பொருட்கள் வாங்க வருபவர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தங்கியிருக்கலாம். கட்டிலில் தூங்கலாம். சோபாவில் அமர்ந்து கதை பேசலாம். ஷாங்காய் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் பெரிய தேநீர் கடை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கே அமர்ந்து, தேநீரை அருந்தியபடியே பேசிக் கொண்டிருக்கலாம். பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

இந்தக் காரணத்தால் கடைக்குத் தினமும் நூற்றுக் கணக்கான முதியவர்கள் வருகிறார்கள். நாள் முழுவதும் குளிர்சாதன வசதியை அனுபவித்தபடி, பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பொருட் கள் எதுவும் வாங்குவதில்லை, இதனால் நிறுவனத்தின் வருமானம் குறைய ஆரம்பித்துவிட்டது. இனிமேல் முதியவர்களை அனுமதிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது நிறுவனம்.

ஐயோ… பாவமே…

பெரு நாட்டின் ஹுவான்டா மாநிலத்தில் வசித்து வருகிறார்கள் க்வின்கானோ குடும்பத்தினர். அருகில் இருந்த நகரத்துக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பினர். கதவைத் திறந்த உடனே சிங்கத்தின் கர்ஜனை அவர்களைப் பயமுறுத்தியது. கதவைப் பூட்டிவிட்டு, சத்தம் வந்த இடம் நோக்கிச் சென்றனர்.

சமையல் அறையில் இருந்து கர்ஜனை வந்துகொண்டே இருந்தது. ஜன்னலை மெதுவாகத் திறந்து பார்த்தபோது, உணவு மேஜைக்கு அடியில் பூமா என்ற மலைச் சிங்கம் ஒன்று கோபத்துடன் பற்களைக் காட்டி கர்ஜித்தது. உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். எப்படி ஊருக்குள் வந்து, வீட்டுக்குள் நுழைந்திருக்கும் என்று எல்லோருக்கும் ஆச்சரியம். பக்கத்தில் உள்ள காடு சமீபத்தில் தீப்பற்றி எரிந்தது. அதனால் உணவு தேடி நகருக்குள் நுழைந்திருக்கும் என்றார்கள் காவலர்கள்.

பூட்டிய வீட்டுக்குள் மலைச் சிங்கம்!

SCROLL FOR NEXT