காங்கோ: காங்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்புவிழாவின் போதே சரிந்துவிழுந்த பரபரபான நிகழ்வு நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்நாட்டின் ஹமா பிரஸ் செய்தி நிறுவனம் தரப்பில், ”காங்கோவில் உள்ளூர்வாசிகளுக்கு மழைக் காலங்களில் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க, புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் புதிய பாலத்தின் ரிப்பனை கத்திரியைக் கொண்டு வெட்டும்போது பாலம் இரண்டாக உடைந்தது. அதிர்ஷ்டவசமாக அதிகாரிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விபத்தினை பலரும் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
வீடியோவைக் கண்ட காங்கோ வாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவிட்டுள்ளனர்.
”இவை எல்லாம் வரி கட்டுப்பவர்களின் பணம்.. இது குறித்து நான் ஆச்சரியப்படுவதில்லை” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொருவர்” ரிப்பன் தான் அந்தப் பாலத்தை தாங்கி இருந்தது” என்று பதிவிட்டிருந்தார்.