பூடானுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியேல் வாங்சக்கை அவர் சந்தித்துப் பேசினார்.
பிரதமராகப் பதவியேற்ற பின்னர், மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். போரா விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை, பூடான் பிரதமர் ஸரிங் டோப்கே வரவேற்று அழைத்துச் சென்றார். திம்பு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியேல் வாங்சக்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, இந்தியா வருமாறு பூடான் மன்னருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
பூடான் நாடாளுமன்றத்தில் நாளை (திங்கள்கிழமை) நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோரும் பிரதமருடன் பூடான் சென்றுள்ளனர்.
தெற்காசிய பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்குடன், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் மிகப் பெரிய துறைமுகங்களை சீனா கட்டமைப்பு வருகிறது. அத்துடன், இந்தியாவோடு நெருக்கமாக உள்ள நேபாளம், பூடானிடம் அண்மைக்காலமாக சீனா கவனம் செலுத்தி வருகிறது.
இதற்குப் பதிலடியாக, தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தும் வகையில், பிரதமர் மோடி வியூகங்களை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே, தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் பூடான் பயணத்தின்போது இந்திய உதவியுடன் அங்கு கட்டப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். மேலும் 600 மெகாவாட் திறன்கொண்ட கோலாங்சூ நீர்மின் நிலைய திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.