சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுபாட்டிலுள்ள அலெப்போ நகரில் அரசுப் படைகள், புரட்சியாளர்களுக்கு இடையே நிகழ்ந்த வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.
சிரியாவில் அலெப்போ நகரில் இன்று (புதன்கிழமை) புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக புரட்சிப் படைகள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தாக்கப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றில் ஆறு மாணவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து சிரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான 'சனா', "அரசுப் படைகள், புரட்சியாளர்களுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை நடந்து வருகிறது. பீரங்கி குண்டுகளைக் கொண்டு வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு தாக்குதலில் 20 பேர் பலியாகினர்” என்று கூறியுள்ளது.
அலெப்போவில் வான்வழித் தாக்குதல் நடந்த இடங்களில் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத், டமாஸ்கஸை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள் அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.