அமெரிக்க அதிபர் தேர்தலை யொட்டி அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா முன்கூட்டியே தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
வரும் நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அந்த நாட்டில் வாக்காளர்கள் விரும்பினால் முன்கூட்டியே தங்களது வாக்கினை பதிவு செய்ய முடியும். அந்தந்த மாகாணங்களின் விதிகளுக்கு ஏற்ப சில நடைமுறைகள் மாறுபடுகின்றன.
அமெரிக்காவின் 14 மாகாணங் களில் வாக்காளர்கள் நேரில் சென்று முன்கூட்டி வாக்களிக்கலாம். 26 மாகாணங்களில் அஞ்சல் மூலம் முன்கூட்டி வாக்களிக்கும் வசதி உள்ளது. சில மாகாணங்களில் மட்டும் இந்த வசதி இல்லை.
அதிபர் பராக் ஒபாமா ஆளும் ஜனநாயக கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்றுமுன்தினம் தனது சொந்த நகரான சிகாகோவுக்கு சென்றார். அவரைச் சுற்றி வழக்கம்போல நிருபர்கள் படையும் உடன் சென்றது. தேர்தலில் வாக்களிப்பது குறித்து நிருபர்களிடம் அவர் எதுவும் கூறவில்லை.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மற்றொரு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் திடீரென தேர்தல் வாக்குப் பதிவு மையத் துக்கு ஒபாமா சென்றார். ஆச்சரி யமடைந்த நிருபர்களிடம், நான் முன்கூட்டியே வாக்களிக்கப் போகிறேன் என்று திடீரென அறிவித்தார்.
வாக்குப்பதிவுக்கான விண்ணப் பத்தை பூர்த்தி செய்தபோது, தனது பிறந்த தேதியை ஒபாமா எழுதினார். அப்போது அங்கிருந்த அலுவலரிடம், ‘எனது பிறந்த ஆண்டு 1961 அல்ல. சான்றிதழில் ஆண்டு தவறாக உள்ளது. நான் 1981-ல்தான் பிறந்தேன். இப்போதுதான் 35 வயதாகிறது’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
வாக்குப்பதிவு மறைவு தடுப்புக் குள் நுழைந்ததும், இனிமேல் நிருபர்களால் பார்க்க முடியாது என்று நையாண்டி செய்தார். யாருக்கு வாக்களித்தீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார்.