எங்கள் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று துருக்கிக்கு இராக் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மோசூல் நகரைக் கைப்பற்ற இராக், படைகளும் குர்து படைகளும் தற்போது தீவிரமாக போரிட்டு வருகின்றன. இந்நிலையில் மோசூல் நகருக்கு அருகே துருக்கியும் படை வீரர்களைக் குவித்து வருகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சுமார் 2 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. இதற்கு இராக் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் ஒட்டமான் மன்னர் ஆட்சியின்போது சுமார் 400 ஆண்டுகள் மோசூல் நகரம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தற்போது அந்த நகருக்கு அருகே துருக்கி ராணுவம் குவிக்கப்படுவதை இராக் அரசு விரும்பவில்லை.
மோசூல் நகரில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்களின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது என்று துருக்கி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.