இந்தியா, மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடுகையில் அமெரிக்க பொருளாதாரம் செத்துக் கொண்டிருக்கிறது என்று குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும் ஹிலாரி கிளிண்டனின் திட்டங்கள் யாவும் சீரழிவுக்கே இட்டுச் செல்லும் என்றும் ட்ரம்ப் சாடியுள்ளார்.
நெவாடா பல்கலைக்கழகத்தில் இரு கட்சி அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நடைபெற்ற நேரடி விவாதத்தில் ட்ரம்ப் இந்திய, சீன பொருளாதாரத்துடன் அமெரிக்க பொருளாதாரத்தை ஒப்பிட்டுப் பேசினார்.
“இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சி விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது. சீனா 7% வளர்ச்சி விகிதத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவுக்கோ இதுவே மிகவும் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதமாக உள்ளது. ஆனால், அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவுதான் கண்டுள்ளதே தவிர முன்னேற்றம் ஏதும் இல்லை.
அமெரிக்காவின் வேலை வாய்ப்பு விவகாரத்தைப் பார்த்தால் 'ரத்த சோகை' பிடித்துள்ளது, நாடு அதன் வர்த்தகங்களை இழந்து வருவது அச்சத்திற்குரியது. நாம் உற்பத்தி செய்வதில்லை, சீனாவிலிருந்து பொருட்கள் வந்து குவிகின்றன. வியட்நாமிலிருந்து வருகிறது உலகம் முழுதும் பொருட்கள் இங்கு வந்து குவிகின்றன.
ஹிலாரி கிளிண்டன் தன் கணவர் நன்றாக ஆட்சி செய்தார் என்று கூறி பெருமைப்படுவார், ஆனால் வட அமெரிக்க தாராள வாணிப உடன்படிக்கை என்னவாயிற்று? அது ஒன்றும் பயனளிக்கவில்லை, அமெரிக்காவின் மிக மோசமான ஒன்றாக அது மாறியது. இப்போது ஹிலாரி டிரான்ஸ்பசிபிக் கூட்டுறவு குறித்து விரும்புகிறார். அதனை கோல்டு ஸ்டாண்டர்ட் என்று கூறிவிட்டு பிறகு பல்டி அடித்தார், அவர் அதை அப்படித்தான் வர்ணித்தார்.
ஜப்பான், கொரியா, ஜெர்மனி, சவுதி அரேபியா ஆகியவை பணக்கார நாடுகள். பணம் மட்டுமேதான். நாம் சவுதி அரேபியாவைக் காக்கிறோம் ஆனால் அதற்காக அவர்கள் நமக்கு என்ன கொடுத்து விட்டார்கள்?அவர்கள் ஏன் நமக்கு பணம் செலுத்துவதில்லை.
ஹிலாரி கணவர் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களினால் அமெரிக்க வேலை வாய்ப்பு ஏகப்பட்டது பறிபோயுள்ளது. நமது வேலைகளை நம் பொருளாதாரமே உறிஞ்சி வெளியேற்றி விட்டது. இப்போதைக்கு நம் பொருளாதாரம் செத்துக் கொண்டிருக்கிறது” இவ்வாறு பேசினார் ட்ரம்ப்.