‘தீவரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குகிறது’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனம் குறித்து பதிலளிக்க அமெரிககா மறுப்பு தெரிவித்துவிட்டது.
வெள்ளை மாளிகையின் ஊடக துறை செயலர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கோவா மாநிலத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், ‘தீவரவாதிகளின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குகிறது’ என்ற பிரதமர் மோடி பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது எர்ன்ஸ்ட் கூறும்போது, “இது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. பொதுவாக கூற வேண்டுமானால், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் இருப்பது பற்றி நாம் பலமுறை விவாதித்து இருக்கிறோம். பாகிஸ்தான் மக்கள்தான் தீவிரவாதத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.
பிரிக்ஸ் அமைப்பில் பங்கேற்றுள்ள சீனாவும் பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த சீனா, தீவிரவாதத்தை ஒரு நாட்டுடனோ மதத்துடனோ தொடர்புபடுத்தக் கூடாது என்றது குறிப்பிடத்தக்கது.