உலகம்

இந்தியா, பாகிஸ்தான் உறவில் நல்ல திருப்பம் ஏற்படலாம்: பாகிஸ்தான் எம்பி.க்கள் நம்பிக்கை

செய்திப்பிரிவு

இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத வகையில் நல்ல திருப்பம் ஏற்படும். தற்போது எழுந்துள்ள பதற்றமும் முழுமை யாக தணியும் என பாகிஸ்தான் எம்பி முஷாஹித் உசேன் சையத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் எம்பி.க்கள் முஷாஹித் உசேனும், ஷெஸ்ரா மன்சாபும் கூறியதாவது:

எல்லையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தும் என நம்புகிறோம். தவிர இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான பணிகளிலும் அமெரிக்கா முக்கிய பங்காற்றும் என கருதுகிறோம்.

இஸ்லாமாபாத்தில் நடக்க வுள்ள சார்க் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் பங்கேற்க வேண்டும். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்க இதுவே சிறந்த வழி என்பதை நரேந்திர மோடியும் நிச்சயம் உணர்ந்திருப்பார்.

பிரதமர் நரேந்திர மோடி திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய நபர். இதற்காக அவர் நெளிவு சுளிவுடன் செயல்படுவார் என நம்பலாம். நவாஸ் ஷெரீப்புடனும் அவருக்கு நல்ல நட்பு உள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் உறவில் எதிர்பாராத அளவுக்கு விரைவிலேயே நல்ல திருப்பம் ஏற்படலாம். இந்த திருப்பத்துக்காக பிரதமர் மோடி நிச்சயம் முயற்சி எடுப்பார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மட்டுமே இந்தியா மிகப் பெரிய அளவில் எழுச்சி காணும். இந்திய வளர விரும்புகிறது. அணுசக்தி விநியோக குழு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் என அடுத்தடுத்து மிகப் பெரிய பணிகளை நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகிறது. இந்தப் பணிகள் நிறைவேற வேண்டுமெனில், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு நல்ல நட்புறவு இருக்க வேண்டும்.

பாகிஸ்தானுடன் போரிட்டால், இந்தியாவின் பொருளாதாரம் 10 ஆண்டுகள் பின் தங்கிவிடும். எனவே பிரதமர் மோடி நிச்சயம் போரை விரும்ப மாட்டார். நீண்ட நாட்களுக்கு பதற்றம் நிலவுவதை யும் அவர் விட்டுவைக்க மாட்டார். பதற்றம் அதிகரித்தால் அது இந்தி யாவுக்கு நல்லதல்ல. இதனை பிரதமர் நரேந்திர மோடி நன்றாக புரிந்து வைத்துள்ளார். போருக்கு போர் என்ற பதிலடியை கொடுக்க பாகிஸ்தானும் விரும்பவில்லை. நாங்கள் இப்பொழுதும் கூட அமைதியை தான் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT