கியூபா மீதான பொருளாதார தடைகளை நீக்கக் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. இது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கியூபா மீது சுமார் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அண்மையில் அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நல்லுறவு மலர்ந்தது. இதைத் தொடர்ந்து சில பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. எனினும் பெரும்பாலான தடைகள் இன்னமும் நீடிக்கின்றன.
இந்நிலையில் கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கக் கோரி ஐ.நா. சபையில் புதன்கிழமை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 190 நாடுகள் ஆதரவு அளித்தன.
வழக்கமாக தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா வாக்களிக்கும். ஆனால் இந்த முறை அமெரிக்கா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமெரிக்காவின் நட்புநாடான இஸ்ரேலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை . இது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.