நஜிப் ரசாக் 
உலகம்

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை உறுதி

செய்திப்பிரிவு

கோலாலம்பூர்: மலேசிய பிரதமராக இருந்தவர் நஜிப் ரசாக். இவர் பிரதமராக இருந்த காலத்தில், அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் ரூ.4,500 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி ஏராளமான நகை, ரொக்கத்தை கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து நஜிப் ரசாக், மலேசிய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பை நேற்று நீதிபதிகள் வழங்கினர். அப்போது நஜிப் ரசாக்குக்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நஜிப்பின் தண்டனையையும் உறுதி செய்தனர். முன்னாள் பிரதமர் ஒருவர் மலேசியாவில் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT