உலகம்

இந்திய, பாக். ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்: அமெரிக்கா அறிவுரை

செய்திப்பிரிவு

இந்திய, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் இருநாட்டு எல்லையில் பதற்றம் தணியும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 29-ம் தேதி அதிகாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவ வீரர்கள், 7 தீவிரவாத முகாம்களை அழித்தனர். இந்த சம்பவத்தால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது.

இந்தியா எங்கள் எல்லைக்குள் நுழையவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் வாதிட்டு வருகிறது. எனினும் வழக்கத்துக்கு மாறாக இந்திய எல்லைப் பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம், வீரர்களைக் குவித்து வருகிறது.

இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் எல்லையில் வீரர்களைத் தயார் நிலையில் நிறுத்திவைத்துள்ளது. எல்லை யோர கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எலிசபெத், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். அவர் கூறியதாவது:

இந்திய ராணுவ தாக்குதல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. எனினும் இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் எல்லையில் பதற்றம் தணியும்.

இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்புறவைப் பேணி வருகிறது. தற்போதைய நிலவரம் தொடர்பாக இரு நாடுகளிடமும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு பாராட்டு

அமெரிக்க அதிபர் மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களிடம் கூறியபோது, பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது, இதற்காக அந்த நாட்டுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT