தேர்தல் நடைமுறைகள் குறித்து டிரம்ப் சந்தேகம் எழுப்பி வருவது அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒபாமா பேசும்போது, "அமெரிக்காவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து டிரம்ப் தொடர்ந்து ஆதாரமற்ற பொய்யான தகவல்களை அளித்து வருகிறார். டிரம்ப்பின் சந்தேகங்கள் அமெரிக்க மக்களை குழப்பமடைய செய்துள்ளன. இது அமெரிக்க ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது.
டிரம்ப்பின் செயல்பாடுகளால்தான் அவரது வாக்குகள் சரியப் போகின்றன. மக்களே ஜனநாயகமான அரசை உருவாக்குகின்றனர். யாரை ஆட்சியில் அமைக்க வேண்டும் என்று மக்களுக்கு நன்கு தெரியும். அமெரிக்கர்கள் ஜனநாயக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என்று பேசினார்.
முன்னதாக, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி முறைகேடுகள் செய்ய வாய்ப்புள்ளது என்று சந்தேகம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இறுதி விவாத நிகழ்வின்போது, ''தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?'' என ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப். ''அதனைப் பற்றி தற்போது கூறமுடியாது'' என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.