ஹெல்சின்கி: பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் பங்கேற்ற பார்ட்டி வீடியோ வைரலான நிலையில, தான் போதைப்பொருள் எடுத்து கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
சன்னா மரின் (36), 2019-ஆம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளவயது பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். சமீபத்தில் வீடியோ சர்ச்சை ஒன்றில் அவர் சிக்கியுள்ளார். சன்னாவும் அவரது நண்பர்களும் உற்சாகமாக பாடி, நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவைக் கண்ட பலரும் சன்னா போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சுமத்தினர். குடிமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியே நாட்டின் பிரதமரே இவ்வாறு நடந்து கொள்வதா என எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பினர்.
இந்தச் சூழலில், அந்த வீடியோவுக்கு சன்னா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “நான், என் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டிதான் செய்தேன். நான் எந்த போதைப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. எனது தனிப்பட்ட வீடியோ பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை நினைத்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். ஆம், மாலை வேளையில் என் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டியில் கலந்து கொண்டேன். நடனம் ஆடினேன், பாட்டு பாடினேன். மது உட்கொண்டேன். ஆனால், நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் செய்தது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
சன்னா மரியா பதவி விலக வேண்டும் என்று குரல் எழுந்து வரும் நிலையில், பிரதமர் என்றால் 24 மணி நேரமும் பணி செய்து கொண்டிருக்க வேண்டுமா என்று பலரும் சன்னா மரினுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகின்றனர்.