உலகம்

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குவதாகச் சொல்லி பின்வாங்கிய எலான் மஸ்க்

செய்திப்பிரிவு

டெக்சாஸ்: மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணியை வாங்குவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்திருந்தார். பின்னர், அந்த முடிவில் இருந்து அவர் பின்வாங்கியுள்ளார். முன்னதாக, சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தை வாங்குவதாகவும் சொல்லியிருந்தார். ஆனால், அந்த முடிவையும் மஸ்க் கைவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டின் ஓல்ட் டிராஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள கிரேட்டர் மான்செஸ்டர் கவுன்டி பகுதியில் இயங்கி வருகிறது மான்செஸ்டர் யுனைடெட் கிளப். ‘தி ரெட் டெவில்ஸ்’ என இந்த அணி அறியப்படுகிறது. ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடி வரும் அணிகளில் ஒன்று இது.

2022-23 ப்ரீமியர் லீக் தொடரில் அந்த அணி இப்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அது குறித்து அந்த அணியின் ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். அந்த அணி ப்ரீமியர் லீக் தொடரில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக 2012-13 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது அந்த அணி.

இந்நிலையில், எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருந்தது. ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

“நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்குகிறேன்” என இன்று அதிகாலை பதிவு செய்த ட்வீட்டில் தெரிவித்திருந்தார் மஸ்க். அவரது இந்த ட்வீட் உலக அளவில் வைரலானது. தொடர்ந்து அது பேசுபொருளானது.

“ட்விட்டர் தளத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் ஜோக் இது. நான் எந்த ஒரு விளையாட்டு அணியையும் வாங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என அடுத்த 4 மணி 30 நிமிடத்தில் மற்றொரு ட்வீட் செய்தார் மஸ்க்.

அவரது இந்த விஷமத்தனமான கலக ட்வீட் மான்செஸ்டர் யுனைடெட் ஆதரவாளர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பி உள்ளது. அவர் பதிவு செய்த ட்வீட்டை மறந்துவிட்டு அணியின் மேம்பாட்டிற்கு உரிமையாளர்கள் நிதியை முதலீடு செய்வது அவசியம் என தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

SCROLL FOR NEXT