இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டாக்காவில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாகேஸ்வரி கோயிலில் வழிபாடு செய்தார். அப்போது, இந்தியா மற்றும் வங்கதேசத்தின் வளமைக்காகப் பிரார்த்தித்தேன் என அவர் தெரிவித்தார். டாக்காவிலுள்ள அக்கோயிலுக்கு சுஷ்மா தனிப்பட்ட முறையில் சென்றார்.
இது தொடர்பாக சுஷ்மா கூறியதாவது: வங்கதேச பயணத் திட்டமிடலின்போதே, தனிப்பட்ட முறையில் தாகேஸ் வரி கோயிலுக்குச் சென்று, பிரார்த்தனை செய்யத் திட்ட மிட்டேன். இப்போது கோயிலில் பூஜை செய்து விட்டேன். எனது சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவுற்றதாகக் கருதுகிறேன்” என்றார்.
வங்கதேச பூஜா உற்சபன் பரிஷத் தலைவர் காஜல் தேவ் நாத் கூறுகையில், “சுஷ்மா ஸ்வராஜுக்கு, கோயிலின் மாதிரி வடிவம் மற்றும் கோயிலி லிருந்து அன்பளிப்பாக சேலை ஒன்றும் வழங்கப்பட்டது. அவர் கோயிலுக்கு வரும்போது, இந்து பெண் பக்தர்கள், இந்து சமய தலைவர்கள் அவரை மலர் கொடுத்து வரவேற்றனர்” என்றார்.
சுஷ்மா ஸ்வராஜ் தாகேஸ்வரி கோயிலில் 30 நிமிடங்கள் வழிபாடு செய்தார். அவருடன் இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், வங்கதேசத்துக்கான இந்தியத் தூதர் பங்கஜ் சரண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தாகேஸ்வரி என்றால் “டாக்காவின் பெண்தெய்வம்” எனப் பொருள். வங்கதேசத்தின் தேசியக் கோயிலாகவும், இந்து சமய வழிபாட்டுத்தலங்களில் முக்கிய இடமாகவும் இது உள்ளது. இக்கோயில் சேனா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் பல்லால் சென்னால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகும்.
கலீதா ஜியாவுடன் சந்திப்பு
வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்க தேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலீதா ஜியாவை சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
கலீதா ஜியாவுக்குச் சொந்த மான விடுதியில் இந்தச் சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடை பெற்றது. மரியாதை நிமித்தமாக இச்சந்திப்பு நடந்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வங்கதேசத்தின் அனைத்துத்தரப்பினருடனும் சுமுக உறவு கொள்ள இந்திய அரசாங்கம் முயன்று வருவதின் ஒருபகுதியாகவே இச்சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வங்கதேசம் சென்ற போது, கலீதா-பிரணாப் சந்திப்பு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பயணம் திருப்திகரம்
வங்கதேசத்திலிருந்து சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பினார். அப்போது வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘இந்தப் பயணம் பற்றிக் கூற வேண்டுமெனில், மிகுந்த பயனுள்ளதாகவும் திருப்திகரமாகவும் அமைந்தது’ என்றார்.
நட்புறவுடன் கூடிய அண்டைநாடுகள் என்ற முறையில் இரு நாடுகளின் பிரச்சினைகளை இருநாடுகளும் இணைந்து தீர்வு காண்பதற்கான மிகச்சிறந்த தொடக்கமே இந்தப் பயணம் என்பதை சுஷ்மா உணர்ந்து கொண்டுள்ளார் என்றார்.