ஐ.நா. சபையில் ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் உலக அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன. இதில் 5 உறுப்பு நாடுகளுக்கும் வீட்டோ அதிகாரம் உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை இந்த நாடுகள் வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்ய முடியும்.
பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ-முகமது தீவிரவாதி மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா முறையிட்டுள்ளது. ஆனால் சீனாவின் முட்டுக்கட்டையால் மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதேபோல சிரியா விவகாரத்தில் அந்த நாட்டு அதிபர் அசாருக்கு ஆதரவாக ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐ.நா. சபையில் ரஷ்யாவும் சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் பல்வேறு அமைதி முயற்சிகள் தடைபடுகின்றன. சிரியா, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் வீட்டோ அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும், அதில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று எங்களது நட்புநாடான இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.