உலகம்

தன்பாலின உறவாளர் உரிமைகளை பாதுகாக்க சிறப்புத்தூதரை நியமிக்க யோசனை: அமெரிக்க செனட்டில் மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

ஆண், பெண் தன்பாலின உறவாளர்கள், இரு பாலின உறவாளர்கள், திருநங்கைகள் ஆகியோரின் மனித உரிமைகளைப் பாதுகாக்க சிறப்புத் தூதரை நியமிக்க வேண்டுமென அமெரிக்க சென்ட்டில் அதன் உறுப்பினர் எட் மார்கே தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். 24-க்கும் மேற்பட்ட செனட்டர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த மசோதா இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விமர்சித்துள்ளது. அதிக மக்கள் வசிக்கும் நாடுகளில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 2013 டிசம்பரில் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி வேறு தீர்ப்பை அளித்தது. அதன்படி தன் பாலின உறவு என்பது கிரிமினல் குற்றம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல இந்த ஆண்டில் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் அங்கு வசிக்கும் திருநங்கைகளின் சட்ட உரிமைகள் மேம்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தன்பாலின உறவாளர்கள், இரு பாலின உறவாளர்கள், திருநங்கைகள் ஆகியோரது மனித உரிமைகள் என்பது நிச்சயமற்றதன்மையில் உள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான் உள்ளது என்று அந்த மசோதாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செனட்டின் வெளியுறவு குழுவின் அறிக்கையையும் அந்த மசோதாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில், 80 சதவீதத்துக்கும் அதிகமான நாடுகளில் தன்பாலின உறவு என்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

ஆண், பெண் தன்பாலின உறவாளர்கள், இரு பாலின உறவாளர்கள், திருநங்கைகள் ஆகியோரின் அங்கீகாரத்துக்கும், சமஉரிமைக்கும் நாம் துணை நிற்க வேண்டுமென்று செனட்டர் மார்கே கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT