சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளம் (Sinkhole) ஒன்று உருவாகியுள்ளது. இப்போதைக்கு அந்த பள்ளம் 160 அடி அகலமும், 656 அடி ஆழமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பள்ளத்தின் அளவு தினந்தோறும் பெரிதாகிக் கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30-ம் தேதி அன்று இந்த பள்ளம் அந்த நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்போது 82 அடிதான் இந்த பள்ளத்தின் விட்டம் இருந்துள்ளது. அதன் அடிப்பகுதியில் தண்ணீரும் இருந்துள்ளது. இப்போது இந்த பள்ளத்தின் அளவு இரட்டிப்பாகி உள்ளதாம். இந்த பள்ளம் அங்குள்ள செப்புச் சுரங்கம் ஒன்றுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ளதாம்.
இந்த பள்ளம் சாண்டியாகோவிற்கு வடக்கே சுமார் 665 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கனடா நாட்டு சுரங்க நிறுவனமான லுன்டின் நிறுவனத்தின் அல்காபரோசா சுரங்கத்திற்கு அருகே ஏற்பட்டுள்ளதாம். இதனை புவியியல் மற்றும் சுரங்க தேசிய சேவை முகமை உறுதி செய்துள்ளது. இந்த பள்ளம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த பள்ளத்தால் சுரங்க பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இந்த பள்ளம் உலகின் பல்வேறு முக்கிய நினைவு சின்னங்கள் மற்றும் சிலைகளை விழுங்கும் அளவுக்கு பெரிதாக உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த பள்ளத்தின் படங்கள் தற்போது உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.