இராக்கின் கிர்குக் நகரில் இன்று (சனிக்கிழமை) ஐ.எஸ். அமைப்பு நடத்திய தாக்குதலில் 46 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இராக் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தாக்குதல் குறித்து இராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், "இராக்கின் கிர்குக் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 46 பேர் பலியாகினர். 133 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் இராக் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு பதிலடியாக இராக் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இராக்கின் பெரிய நகரமான மொசுல், கடந்த 2014-ல் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.
இதனைத் தொடர்ந்து ஐ.எஸ். அமைப்புக்கும், இராக் அரசுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஐ.எஸ். கட்டுப்பாட்டிலுள்ள மொசுல் நகரை மீட்க போர் தொடங்குவதாக இராக் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.