வடகொரிய தலைநகரில் இரண்டு ஆண்டுகளாக மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
19 வயது சிம்பன்ஸியைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. டால் என்ற இந்த சிம்பன்ஸி, அநாயாசமாகப் புகைப்பிடிக்கிறது. சிகரெட்டை வாயில் வைத்து, லைட்டரின் உதவியால் பற்ற வைத்து, தொடர்ச்சியாகப் புகையை வெளிவிடுகிறது. லைட்டர் இல்லாவிட்டால், ஏற்கெனவே பிடிக்கப்பட்ட சிகரெட்டில் இருந்து, பற்ற வைத்துக்கொள்கிறது.
டால் சிகரெட் பிடிக்கும் அழகைப் பார்ப்பதற்காகவே கூட்டம் படையெடுக்கிறது. சிம்பன்ஸிக்கு சிகரெட் பழக்கத்தை ஏற்படுத்தியதற்காக விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சிம்பன்ஸியின் பயிற்சியாளரோ, புகையை உள்ளே இழுப்பதில்லை. அதனால் சிம்பன்ஸிக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்கிறார்.
இந்தப் பூங்காவில் பறவைகள் நடனமாடுகின்றன, குரங்குகள் கூடைப்பந்து விளையாடுகின்றன. யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், பெங்குவின்கள் என்று ஏராளமான உயிரினங்கள் இருந்தாலும் இருபதே நாட்களில் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டு, மக்களின் கவனத்தை ஒட்டு மொத்தமாகத் தன் பக்கம் திருப்பியிருக்கிறது டால் சிம்பன்ஸி.
தானும் கெட்டு, பிற உயிரினங்களையும் கெடுப்பதில் மனிதனுக்கு இணை இல்லை…
முகமது பெல்லோ அபுபக்கர் நைஜீரியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர். 92 வயதான இவர், இதுவரை 107 பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார். 185 குழந்தைகள் இவர்களுக்கு இருக்கிறார்கள்.
2008-ம் ஆண்டு, 86-வது மனைவியைத் திருமணம் செய்தபோதுதான், செய்தி வெளியில் தெரிய வந்தது. பலரும் முகமது அபுபக்கரை விமர்சனம் செய்தார்கள். இவர் மீது வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். இஸ்லாம் சட்டப்படி 4 மனைவிகளோடு மட்டும் வாழ வேண்டும் என்று எச்சரித்து, முகமது அபுபக்கரை விடுதலை செய்தது நீதிமன்றம்.
அதற்குப் பிறகு 19 பெண்களைத் திருமணம் செய்துவிட்டார். “இறைவனின் கட்டளைப்படியே நான் திருமணம் செய்து வருகிறேன். என் ஆயுள் முழுக்க நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் கட்டளை. இறைவனின் கட்டளையை என்னால் மீற முடியாது. நான் மற்றவர்களைப் போல சாதாரண மனிதன் அல்ல. என்னைப் பார்த்து யாரும் அதிகமான பெண்களைத் திருமணம் செய்துகொள்ளாதீர்கள். என் மனைவிகளிடம் கேட்டுப் பாருங்கள். எல்லோருமே என்னை விருப்பப்பட்டுதான் திருமணம் செய்திருக்கிறார்கள்” என்கிறார் முகமது அபுபக்கர்.
தற்போது 10 மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டார். இவருக்குக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வருமானமும் கிடையாது. செல்வந்தரும் இல்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது 18 கிலோ அரிசி இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இவரும் சம்பாதிக்கவில்லை. மனைவிகளையும் வேலைக்கு அனுப்புவதில்லை. எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால், எல்லாம் இறைவன் கொடுக்கிறான் என்கிறார் முகமது அபுபக்கர்.
விசித்திர மனிதர்!