குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி 3 நாள் பயணமாக ஹங்கேரி சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவர் பாலடோன் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாலடோன்பியூர்டன் நகருக்குச் சென்றார்.
நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை கவுரவிக்கும் வகையில், இந்நகரில் அவரது மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தெருவுக்கும் சதுக்கத்துக்கும் தாகூர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்குள்ள தாகூர் சிலைக்கு ஹமீது அன்சாரி மலரஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஹமீது அன்சாரி பேசும்போது, “கடந்த 1926-ம் ஆண்டு தாகூர் இதய நோய் சிகிச்சைக்காக இந்த நகரில் சில நாட்கள் தங்கியிருந்தார். தாகூரின் இதயம் எப்போதும் இந்நகரில் நிலை கொண்டிருக்கும். இந்தியா வும் ஹங்கேரியும் அரசியல் மற்றும் பொருளாதார உறவு களை மட்டுமே பகிர்ந்துகொள்ள வில்லை. இருநாட்டு மக்கள் இடையேயும் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது” என்றார்.
தாகூர் சிலைக்கு அருகில் மரக்கன்று ஒன்றை அன்சாரி நட்டார். “இந்தியா- ஹங்கேரி உறவுகளைப் போல இந்த மரக்கன்றும் ஒருநாள் பெரிய மரமாக வளரும்” என்று அன்சாரி நம்பிக்கை தெரிவித்தார்.