பிரேசில் நாட்டில் தலை ஒட்டி பிறந்த மூன்று வயதான இரட்டையரை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் பிரித்துள்ளனர் மருத்துவர்கள். இந்த பணியில் சுமார் 100 மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழு 27 மணி நேரம் தொடர்ச்சியாக 9 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.
முக்கியமாக இந்த அறுவை சிகிச்சையில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் உதவியை மருத்துவ குழுவினர் நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை அறுவை சிகிச்சையில் இது மிகவும் சிக்கலானது என இந்தப் பணியை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேசில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ரோரைமா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா. இருவரும் கடந்த 2018 வாக்கில் தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர். இருவரும் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெத்தையில் தான் பிறந்த நாள் முதல் இதுநாள் வரையிலான தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டுள்ளனர்.
பிறந்தது முதல் இரட்டையர் எதிரெதிரே பார்த்தது கூட கிடையாதாம். இப்போது அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அறுவை சிகிச்சை மூலமாக ஒருவரை ஒருவர் பார்ப்பது சாத்தியமாகி உள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மருத்துவ தொண்டு நிறுவனமான ‘ஜெமினி அன்ட்வைன்ட்’ (Gemini Untwined) நிறுவனம்தான் இரட்டையர்களுக்கு தேவைப்பட்ட அறுவை சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
“மிகவும் சவாலான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை இது. ஏனெனில் சிறுவர்கள் இருவரும் நரம்பு மண்டலத்தின் முக்கிய நரம்புகளை அவர்களது பிறப்பு முதல் பகிர்ந்து கொண்டிருந்தனர். அவர்களது நிலை உயிருக்கு ஆபத்தான ஒன்றாக இருந்தது” என சிகிச்சையை மேற்கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநரும், மருத்துவருமான கேப்ரியல் முஃபரேஜ் தெரிவித்துள்ளார்.
“இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதில் யாருக்குமே நம்பிக்கை இல்லை. ஆனால் எங்களுக்கு அதில் முழு நம்பிக்கை இருந்தது. இப்போது இதன் முடிவு எங்களை திருப்தி அடைய செய்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்காக இரட்டையர்களின் மூளை ஸ்கேன்களை டிஜிட்டல் மேப்பாக உருவாக்கியுள்ளனர் மருத்துவர்கள். அதன் மூலம் டிரான்ஸ் அட்லாண்டிக் விர்ச்சுவல் ரியாலிட்டி அறுவை சிகிச்சை சோதனையை பயிற்சி செய்து பார்த்துள்ளனர். அதில் கிடைத்த சக்சஸை அப்படியே ரியலான அறுவை சிகிச்சையிலும் செய்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரட்டையர்களின் படத்தை மருத்துவக் குழு பகிர்ந்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் மருத்துவமனையில் எங்கள் குடும்பம் இருந்தது. இப்போது இந்த சிகிச்சை மூலம் எங்களது துயரம் நீங்கி உள்ளது என்கிறார் இரட்டையர்களின் தாயார் அட்ரிலி லிமா.
பிரேசில் நாட்டில் உள்ள IECPN மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கும் முன்னர் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.