திபெத்தில் உற்பத்தியாகி இந்தியாவை நோக்கி பாயும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையின் கட்டுமானப் பணிக்காக ஒரு கிளை நதியின் நீரோட்டத்தை சீனா தடுத்து நிறுத்தி உள்ளது.
பிரம்மபுத்ரா நதியின் கிளை களில் ஒன்று ஜியாபுகு. நீர் மின் உற்பத்தி திட்டத்துக்காக, இந்த ஆற்றின் குறுக்கே திபெத்தின் ஜிகாஜே என்ற இடத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடியில் லால்ஹோ என்ற பெயரில் அணை கட்டப்பட்டு வருவதாக சீன அதிகாரி ஜாங் யுன்பாவ் அந்நாட்டு செய்தி நிறுவனமான ஜின்ஹுவாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த அணை அமைய உள்ள ஜிகாஜே, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கு அருகே அமைந்துள்ளது. பிரம்மபுத்ரா நதியானது ஜிகாஜேவிலிருந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைகிறது. மிகவும் அதிக செலவில் கட்டப்படும் திட்டமான இந்த அணையின் கட்டுமானப் பணி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதாகவும், 2019-ல் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த அணை கட்டப்படுவதால் பிரம்மபுத்ரா நதி பாயும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு வர வேண்டிய நீரின் அளவு குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர் பாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை நிறுத்தி வைக்க இந்திய அரசு பரிசீலித்து வந்த நிலையில், சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.