எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது என்று அல் காய்தா தீவிரவாத கும்பல் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அல்-காய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-காய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சில நேரங்களில் குறிப்பாக, இந்திய விவகாரங்களில் வீடியோக்களில் தோன்றி பேசிவந்தார்.
அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பதுங்கியிருந்தார். ட்ரோன் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர், "அல் ஜவாஹிரி பதுங்கியிருக்கும் இடத்தை அறிந்துவிட்டதாக தகவல் வந்ததும். அவரை அழிக்கும் ஆபரேஷனுக்கு நான் அனுமதி கொடுத்தேன். அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதால் அமெரிக்காவில் செப்டம்பர் 11ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 பேரின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்ட ஜோ பைடன், "அமெரிக்காவுக்கு தீங்கு இழைப்பவர்களிடமிருந்து அமெரிக்க மக்களைக் காப்பதற்காக நாங்கள் எதை செய்வோம். இன்றிரவு நாங்கள் அதை நிரூபித்துள்ளோm
எவ்வளவு காலம் ஆனாலும் சரி
எங்கு நீங்கள் பதுங்கினாலும் சரி
நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
பால்கனியில் பதுங்கியிருந்த ஜவாஹிரி: அமெரிக்க ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது அல் ஜவாஹிரி மீது தாக்குதல் நடத்தும்போது அவர் பதுங்கிடத்தில் மீது ட்ரோன் மூலம் இரண்டு ஹெல் ஃபயர் ஏவுகணைகள் வீசப்பட்டன. அதி நவீன ஆயுதங்கள் மூலம் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அல் ஜவாஹிரி: 5 முக்கியத் தகவல்கள்: ஜவாஹிரி செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். எகிப்தின் கெய்ரோ தான் அவர் சொந்த ஊர். இளம் வயதிலேயே இஸ்லாமிய அடிப்படைவாத குழுவில் இணைந்தார். 15 வயதில் கைதானார்.
பின்னர் அப்போதைய எகிப்து அதிபர் அன்வர் சதாத்தை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார். இதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 1997ல் எகிப்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் மூளையாக அல் ஜவாஹிரி செயல்பட்டார்.
செப்டம்பர் 11, 2001ல் நடந்த தாக்குதலில் அல் ஜவாஹிரிக்கு முக்கிய பங்குண்டு. அந்த காலக்கட்டத்தில் அவர் ஒசாமா பின் லேடனின் நம்பிக்கைக்குரிய 5 பேர் படையில் ஒருவராக இருந்தார்.
2011 ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் ஜவாஹிரி அல் காய்தா அமைப்பின் தலைவரானார்.
இந்நிலையில் அவரின் இருப்பிடத்தை அமெரிக்கப் படைகள் அறிந்தன. கடந்த 25 ஆம் தேதி பைடன் அவரைக் கொல்லும் ஆபரேஷனுக்கு அனுமதி கொடுத்தார். அதி நவீன ஆயுதங்கள் கொண்டு நேற்று அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார்.