மாலியில் செயல்பட்டு வரும் ஐ.நா. அமைதிக் காப்பாளர்கள் முகாமைக் குறிவைத்து நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மாலி நகர ஐ.நா. அமைதிக் காப்பாளர் பிரிவுக்கான செய்தித்தொடர்பாளர் ஆலிவர் சால்கடோ கூறும்போது, ''கிடால் பகுதியில் ஐ.நா. அமைதிக் காப்பாளர்கள் தங்கியிருந்த முகாமில் தீவிரவாதிகள் புகுந்தனர். திடீரென நடத்தப்பட்ட சிறு பீரங்கி தாக்குதலில் அமைதிக் காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். 8 அமைதிக் காப்பாளர்கள் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இரு வாகனங்கள் வெடி பொருட்களை வீசிவிட்டுச் சென்றன'' என்று தெரிவித்தார்.
ஐ.நா. முகாம் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் என்ன?
தென்னாப்பிரிக்க நாடான மாலியில் அல்-காய்தா தீவிரவாதிகள், அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் தலைநகரான பமாகோ பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் வடக்கு மற்றும் மத்திய மாலியில் பதற்ற சூழல் நிலவி வருகிறது.
இங்கு தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை ஏற்படுத்த வேண்டி ஐ.நா. அமைதிக் காப்பாளர்கள் மாலி நாட்டில் முகாமிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐ.நா. அமைதிக் காப்பாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.