பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், அமெரிக்க நவீன இசை தயாரிப்பாளர் ஸ்க்ரில்லெக்ஸ் ஆகிய இருவர் மீதும் 'சாரி' என்ற பாடலுக்கு உரிமை கோரி ஒரு பெண் வழக்கு தொடுத்துள்ளார்.
கேஸி டைனல் என்ற பாடகி, பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், அமெரிக்க எலக்ட்ரானிக் இசை தயாரிப்பாளர் ஸ்க்ரில்லெக்ஸ் ஆகிய இருவர் மீதும் அதிரடி ஹிட் பாடலான 'சாரி'-க்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
வழக்கில், ஜஸ்டின் மற்றும் ஸ்க்ரில்லெக்ஸ் இருவரும் தன்னுடைய 'ரிங் த பெல்' பாடல் ட்ராக்கின் முக்கிய அம்சங்களை 'சாரி' பாடலில் பயன்படுத்தி கொண்டதாக கேஸி தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் பாடலை எழுதிய ஜூலியா மைக்கேல்ஸ், ஜஸ்டின் ட்ராண்டர், மைக்கேல் டக்கர் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள கேஸி, ''ஜஸ்டின் பீபர் 'சாரி' பாடலில் என்னுடைய இசையை மாதிரியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், முழுமையாகவே பயன்படுத்திக் கொண்டார். படத்தின் எழுத்தாளர்கள், கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என யாருமே என் பாடலுக்கான உரிமையைக் கேட்டுப் பெறவில்லை.
'சாரி' பாடல் வெளியானதும் என்னுடைய வழக்கறிஞர், ஜஸ்டின் பீபருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் பீபரின் குழு எங்களை உதாசீனப்படுத்தியது. பாடலுக்கான உரிமை மீறல் தொடர்பாக என்னிடம் பேச ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேன். அதற்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.
அதனால் 'சாரி' பாடல் குழுவினரான பீபர், ஸ்க்ரில்லெக்ஸ் மீது வழக்குத் தொடுத்துள்ளேன்" என்றார் கேஸி.