உலகம்

ரூ.24 லட்சத்துக்கு சினிமா டிக்கெட்: சாதித்துக்காட்ட வாங்கிய ஏழைக் காதலன்

செய்திப்பிரிவு

ஏழை என்ற காரணத்தால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் காதலி தன்னை நிராகரித் ததை மனதில் கொண்ட காதலன், 40 ஆயிரம் டாலர்களுக்கு (சுமார் ரூ.24 லட்சம்) 'டிரான்ஸ்பார்மர்' பட டிக்கெட்டுகளை வாங்கி ஒட்டு மொத்த சீனாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

வாங் என்ற தன் குடும் பப் பெயரால் மட்டுமே சீன ஊடகங்களால் அடையாளப் படுத்தப்படுகிற அந்தக் காதலன் சீனாவின் சமூக வலைத்தளமான சினா வீபோ என்ற தளத்தில் ஒரு நிலைத்தகவலைப் பதிவிட்டார்.

அதில், 'ஹூ சியாயூன்: 2007ம் ஆண்டு நம்முடைய‌ நான்காம் ஆண்டு கல்லூரி வாழ்வில் இரண்டு சினிமா டிக்கெட்டுகளை வாங்க முடியாத அளவுக்கு ஏழ்மையில் இருந்தேன். 'நீ வாழ்க்கை முழு வதும் இப்படித்தான் இருக்கப் போகிறாய்' என்று நீ சொன்னாய். அந்த ஒரு காரணத்தால் நான் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்தேன். அதனால் இன்று என் மாதச் சம்பளத்தில் பாதியைச் செலவிட்டு பெய்ஜிங்கில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களின் அனைத்து டிக்கெட்டுகளையும் நானே வாங்கியிருக்கிறேன். அன்று நீ சொன்ன வார்த்தைகள் தவறு என்பதை எடுத்துக்காட்டவே நான் இதைச் சொல்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியான 'டிரான்ஸ்பார்மர்' ஆங்கிலப் படத் துக்கான முதல் காட்சிக்காக பெய் ஜிங்கின் நான்கு ஐமேக்ஸ் தியேட்டர்களில் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கியுள் ளார். இதற்கு ஆதாரமாக, டிக்கெட் டுகளை முன்பதிவு செய்யும் நிறுவனத்துடனான ஒப்பந்தத் தையும் பதிவேற்றியுள்ளார்.

தன்னுடைய பதிவை தன் காதலி பார்க்கும் வரைக்கும் அதைத் தொடர்ந்து 'மறு பதிவு' செய்யும் படி இணையதளத்தைப் பயன் படுத்துபவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு 'மறு பதிவு' செய்பவர்களுக்கு இலவச மாக டிக்கெட்டுகளைத் தரப்போவ தாகக் கூறினார். இதன் காரணமாக அவரின் பதிவு வெள்ளிக்கிழமை மதியம் வரை சுமார் 1,10,000 முறை 'மறு பதிவு' செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்து அவரின் முன்னாள் காதலி அவரைத் தொலை பேசியில் தொடர்பு கொண்ட தாகவும், பழைய சண்டையை மறந்து பேசியதாகவும், எனினும் மீண்டும் உறவைப் புதுப்பிக்க வாய்ப்புகளில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

'அவளை நான் முதன் முதலாகச் சந்தித்தபோது, ஒரு நாள் என்னைவிட்டு அவள் பிரிந்து சென்றால், அவளை நான் தேடுவதை உலகுக்கு அறிவிப் பேன் என்று சத்தியம் செய்தேன். அப்படியே நிகழ்ந்தது' என்கிறார் வாங். முந்தைய 'டிரான்ஸ்பார்மர்' படங்கள் சீனாவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளைப் படைத்தன. தற்போது வெளியாகியிருக்கும் 'டிரான்ஸ்பார்மர் 4' படம் வெள்ளிக் கிழமை மட்டும் 40 மில்லியன் யுவான் களை (சுமார் ரூ.40 கோடி) வசூல் செய்து புதிய சாதனை படைத்திருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT