இந்தியாவின் கான்பூரில் உள்ள ஐஐடியில் படித்து பட்டம் பெற்றவர் ராகேஷ் கே.ஜெயின். தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியில் உள்ள மசாசூசெட்ஸ் பொது மருத்துவ மனையில் கட்டிகள் தொடர்பான உயிரியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். புற்று நோய்க்கான கீமோதெரபி மற்றும் கதிரியக்கம் சிகிச்சை மற்றும் ரத்த நாளங்களில் உருவாகும் கட்டிகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் அறிவியல், பொறியியல் மற்றும் கணிதவியலில் தன்னிகரற்ற சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுதோறும் அந்நாட்டின் கவுரவமிக்க தேசிய அறிவியலுக்கான பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ராகேஷ் கே.ஜெயின் உயிரியல் துறையில் சாதனை படைத்துள்ளதை அடுத்து அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.
இதற்கான விழா வரும் 19-ம் தேதி நடைபெறும் என்றும், அப்போது அதிபர் ஒபாமா இந்தப் பதக்கத்தினை ராகேஷ் கே.ஜெயின் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 16 பேருக்கு வழங்குவார் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சிறுவனுக்கு விருது
இதே போல் இன்டெல் அறக்கட்டளையின் இளம் விஞ்ஞானி விருதுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷ்யாமன்டக் பெய்ரா (15) என்ற சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான். போலியோவினால் பாதிக்கப் பட்டவர்கள் இயல்பாக நடப்பதற்கு உதவும் வகையில் மிக குறைந்த பொருட்செலவில் ஷ்யாமன்டக் எலெக்ட்ரானிக் கருவியை உருவாக்கியுள்ளான். இந்த கருவியை போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அணிய வைத்து இன்டெல் அறக்கட்டளை சோதித்து பார்த்தது. அதில் முழு திருப்தி அடைந்ததும், ஷ்யாமன்டக்குக்கு இளம் விஞ்ஞானி விருது மற்றும் ரூ.33 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்க முடிவு செய்தது. தவிர சிறந்த விஞ்ஞான பிரிவுக்கான விருதுக்காக ராஜீவ் ஜா, மரிஸா சுமதிபலா, ஸ்வேதா ரேவனூர், தியாஷா ஜோர்தார் மற்றும் பிரசாந்த் கோடிஷாலா ஆகிய 5 இந்திய வம்சாவளி அமெரிக்கர்களும் தேர்வாகியுள்ளனர்.