அரைகுறையான எந்தக் கொள்கை முடிவும் விரும்பிய நோக்கத்தை நிறைவேற்ற உதவாது. வேளாண் துறைக்கு அரசு அளிக்கும் அரைகுறை சலுகைகளால் எதிர்பார்த்தபடி விளைச்சல் பெருகாது. வங்கதேச அரசு நடப்பு வரவுசெலவுத் திட்டத்தில் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க மானியங்கள் என்ற பெயரில் சில சலுகைகளை மட்டுமே அறிவித்துள்ளது; அதேசமயம் குறைந்தபட்சக் கொள்முதல் விலை தொடர்பாக எந்தவித உறுதியான அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் சாகுபடி செய்யத் தயங்குவார்கள்.
உரம், மின்சாரத்துக்காக மறைமுக மானியமாக 9,000 கோடி டாகாவை மட்டுமே அரசு ஒதுக்கியிருக்கிறது. நியாய விலையில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதற்காக எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. மானிய உதவி போன்ற சலுகைகளால் அதிக நிலப்பரப்பு சாகுபடியின் கீழ் வரக்கூடும், ஆனால், அரசு எதிர்பார்த்தபடி உணவு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றின் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள மாட்டார்கள். சாகுபடிச் செலவைவிடக் கூடுதலாகக் கொள்முதல் விலை இருந்தால்தான் விவசாயிகள் அந்தப் பயிரைச் சாகுபடிக்குத் தேர்வுசெய்வார்கள்.
வெறும் மானியம்தான், கொள்முதல் விலையைத் திட்டவட்டமாக அறிவிக்க முடியாது என்ற நிலை இருந்தாலே விவசாயத்துக்கு வீழ்ச்சிதான்.
நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்புக்கு வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்துவருகிறது. வேளாண் துறையின் வீழ்ச்சியை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். நெல், கோதுமைச் சாகுபடி குறைந்து உள்நாட்டில் அவற்றின் விலை அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பதுடன் அரசியல் ஸ்திர நிலையும் ஆட்டம் காணும்!