உலகம்

மன்மோகன்- வென் ஜியாபா நடத்திய ரகசிய பேச்சின்போது நுழைந்த ஒபாமா: ஹிலாரி கிளிண்டன் தகவல்

செய்திப்பிரிவு

கோபன்ஹேகனில் 2009 டிசம்பரில் நடந்த மாநாட்டின்போது அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் சீன பிரதமர் வென் ஜியாபாவும் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளே நுழைந்தார்.

இந்த தகவலை தான் எழுதிய ‘ஹார்டு சாய்சஸ்’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன்.

2009ல் கோபன்ஹேகனில் சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்தது. தனது பிடிக்குள் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை கொண்டு வந்து அமெரிக்காவை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே சீனாவின் நோக்கம்.

ஆனால், ஒபாமாவின் திட நம்பிக் கையும் சமயோசிதமும் சீனாவின் அந்த நோக்கத்தை முறியடித்தது. அதிபர் ஒபாமாவும் நானும் டென்மார்க் நகரமான கோபன் ஹேகனில் நடக்கும் சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு சீன பிரதமர் வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் கரியமிலவாயு போன்றவற்றை பெரிய அளவில் வெளியேற்றும் நாடுகள் குறிப்பாக சீனா, அமெரிக்காவின் தலைவர்கள் கூடிப் பேசினால்தான் தீர்வு கிடைக்கும் என்பதே நடைமுறை உண்மை. ஆனால் சீனா எங்களை தவிர்த்தது. அதைவிட மோசம் என்ன வெனில் அமெரிக்கா தரப்பில் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டத்தை தள்ளுபடி செய்யும் வகையில் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக் காவின் பிரதிநிதிகளை அழைத்து சீனா ரகசிய பேச்சு நடத்த ஏற்பாடு செய்ததை அறிந்தோம்.

இந்நிலையில் ரகசிய கூட்டம் நடக்கும் இடத்தை கண்டுபிடித் தோம். உள்ளே சீன பிரதமர் வென் ஜியாபா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா இருந்தனர்.

சிரித்தபடியே அவர்களை நோக்கி, நீங்கள் தயாரா என்று கேட்டபடி ஒபாமா நுழைந்தார். இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT