வங்கதேசத்தில் மதச்சார்பற்ற சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பந்தர்பனில் 75 வயது மூத்த பவுத்த துறவி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பந்தர்பன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள பவுத்த மதக்கோயிலில் துறவியின் உடல் ரத்த வெள்ளத்தில் மிதந்ததைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியுற்றனர்.
இவரது படுகொலைக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும் கொலை நடத்தப்பட்ட விதம் இதற்கு முந்தைய சம்பவங்களை ஒத்திருப்பதால் இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவரிசையாகவே இருக்கும் என்று போலீஸ் தரப்பில் ஐயம் எழுந்துள்ளது.
கொலையுண்ட 75 வயது பவுத்தத் துறவியின் பெயர் மாங் ஷுவே. இன்று பைஷாரியில் உள்ள பவுத்த கோயிலில் அதிகாலையில் 4 பேர் நுழைந்து அவரை படுகொலை செய்ததற்கான தடயங்கள் இருந்ததாக காவல்துறை உயரதிகாரி ஜாஷி உதின் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சுஃபி, ஷியா, மற்றும் அகமதிய முஸ்லிம்கள் கொலையிலும் இந்துக்கள், கிறித்தவர்கள், அயல்நாட்டினர் கொலையிலும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளன.
அதாவது இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் வங்கதேசத்தில் இயங்கும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் இந்தக் கொலைகளுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
ஆனால் மதச்சார்பற்ற வங்கதேச அரசு இஸ்லாமிக் ஸ்டேட், அல்கொய்தா அமைப்புகள் அங்கு இல்லை என்று கூறுவருகிறது. வங்கதேச மக்கள் தொகையில் சுமார் 1% பவுத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.