அணு ஆயுதவெறி பிடித்த அமெரிக்காவின் பிம்பத்தை மறைக்க அதிபர் ஒபாமா ஹிரோஷிமாவுக்கு வருகை தந்துள்ளார் என்று வடகொரியா தாக்கிப் பேசியுள்ளது.
1945-ம் ஆண்டு அமெரிக்காவினால் அணுகுண்டு தாக்கி அழிக்கப்பட்ட ஹிரோஷிமாவுக்கு வருகை தரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒபாமாவின் வருகை ‘அதிர்ச்சிகரமான போலி வேஷம்’ என்று சாடியுள்ளது வடகொரியா.
வடகொரியாவின் அதிகாரபூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் நேற்று இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவையும் ஒபாமாவையும் கடுமையாகச் சாடியுள்ளது.
“ஒபாமா வருகை ஒரு சிறுபிள்ளைத் தனமான அரசியல், சேதப்படுத்தப்பட்ட ஹிரோஷிமாவை ஒபாமா பார்வையிட்டாலும், அணுப்போர் வெறியர், அணு ஆயுத பெருக்கவாதி என்ற தனது அடையாளத்தை ஒபாமா ஒருபோதும் மறைக்க முடியாது” என்று கடுமையாக சாடியுள்ளது.
மேலும், அமெரிக்காவின் ஆண்டுக்கணக்கான அணுப்போர் பகைமைக்கு எதிர்வினைதான் தங்களது அணு ஆயுத திட்டங்கள் அனைத்தும்.
சுமார் 1,40,000 பேரை பலி கொண்ட ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் விவகாரத்தில் ஜப்பான் அமெரிக்காவை அழைப்பதன் மூலம் இரண்டாம் உலகப்போரில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது தாங்கள்தான் என்று காட்டிக் கொள்கிறது ஜப்பான். ஆனால் அதன் கடந்த காலத்திய காலனிய ஆதிக்க வெறியையும், போர்க்காலத்தில் ஜப்பான் ராணுவம் பிறர் மீது கட்டவிழ்த்துவிட்ட காட்டுத்தனமான வன்முறையையும் மறைக்க வரலாற்றைத் திரிக்கிறது.
போர் வெறித்தனம் கொண்ட ஜப்பான் தனது கடந்த கால குற்றங்களை மறைக்கப் பார்க்கிறது, என்று சாடியுள்ளது.
கொரியாவை ஜப்பான் சுமார் 30 ஆண்டுகாலம் தனது காலனியாதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது, ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகே ஜப்பான் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.