உலகம்

தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டது: ரூ.210 கோடிக்கு ஏலம் போன இளஞ்சிவப்பு வைரம்

பிடிஐ

‘யுனிக் பிங்க்’ எனப் பெயரிடப்பட்ட மிக அரிதான இளஞ்சிவப்பு வைரம் ரூ.211.80 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஏலத்தில் எடுக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரங்களிலேயே இதுதான் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது என்ற சாதனையை இந்த வைரம் பெற்றுள்ளது. சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஏலத்தில் ஆசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடும் போட்டிக்கு மத்தியில் 15.38 காரட் எடையுள்ள பேரிக்காய் வடிவிலான இந்த இளஞ்சிவப்பு வைரத்தை ஏலத்தில் எடுத்தார்.

நியூயார்க்கைச் சேர்ந்த கோரா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் இதனை விற்பனை செய்தது. சோத்பி நிறுவனம் ஏலம் நடத்தியது.

இதற்கு முன் இந்த ரகத்தில் 16.08 காரட் எடையுள்ள ஸ்வீட் ஜோசபைன் என்ற வைரம் சுமார் ரூ.190 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது.

யுனிக் பிங்க் வைரமானது தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT