உலகம்

2050-ல் இந்திய நகர்ப்புற மக்கள் தொகை 30 கோடி அதிகரிக்கும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

பிடிஐ

வரும் 2050-ம் ஆண்டில் இந்திய நகரங்களில் புதிதாக வசிப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி அதிகரிக்கும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் வாழ்விடம் பற்றிய துறை, ‘நகரமயமாக்கம் மற்றும் வளர்ச்சி: எதிர்காலம்’ என்ற தலைப்பில் ‘உலக நகரங்கள் அறிக்கை 2016’ஐ முதல்முறையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் நகரங்களில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. வரும் 2050-ம் ஆண்டில் இந்திய நகரங்களில் புதிதாக வசிக்க குடியேறும் மக்களின் எண்ணிக்கை கூடுதலாக 30 கோடி அதிகரிக்கும். எனவே, அவ்வளவு மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய நகரங்களை உருவாக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகரங்கள் ஏற்கெனவே 60 சதவீத பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனவே, இந்திய அரசுக்கு கூடுதலாக நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தெற்காசிய நாடுகளில் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள டாகா, மும்பை, டெல்லி, கராச்சி, லாகூர் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் மெகா சிட்டிகளாக மாறி வருகின்றன. நகரங்களில் குடியேறுபவர்கள் நகரங்களை விரிவாக்கம் செய்ய வேண்டியது சவாலாக இருக்கும்.

இந்தியாவில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் நகரங்களில் வேலைவாய்ப்பு 3.22 சதவீதம் அதிகரித்துள்ளது. நகரமயமாக்கல் ஒரு வகையில் கிராமப்புறங்களில் உள்ள வறுமை ஒழிப்புக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன.

இந்த நிலையில் திட்டமிடப்படாத நகரங்களில் நிலவும் இடப் பற்றாக்குறை இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT