இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் டீ குடிப்பதை குறைக்குமாறு பொதுமக்களுக்கு அந்நாட்டு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் திட்ட அமைச்சர் அஷான் இக்பால், டீ குடிப்பதை குறைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “பாகிஸ்தான் தற்போது பிறநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மக்கள் டீ குடிப்பதை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும். தேயிலை உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறும் வரையில் மக்கள் இம்மாதிரியான இறக்குமதி பொருட்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும்.
2021-22 நிதியாண்டில் பாகிஸ்தான் 83.88 பில்லியன் டாலர் மதிப்புள்ள தேயிலையை பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தற்போது கடனுக்கு தேயிலையை இறக்குமதி செய்வதால், தேயிலை நுகர்வை 1 அல்லது 2 கோப்பைகள் ஆக குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் அவரது கருத்தை விமர்சித்து பலரும் மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.