தீவிரவாதிகள் மீது விமானம் மூலமாக தாக்குதலை நடத்தும்படி, இராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
இராக்கில் அரசுக்கு எதிரான தீவிரவாத படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றை கைப்பற்றி வருகிறது. தொடர்ந்து முன்னேறி வரும் தீவிரவாத படைகளை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவின் உதவியை இராக் கோரியது.
இந்த நிலையில், தீவிரவாதிகளை தாக்க அமெரிக்க ராணுவப் படையை அனுப்ப முடியாது என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாஷிங்டனில் பேசிய அதிபர் ஒபாமா, "இராக்கில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட அமெரிக்கப் படைகளை, அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது.
இந்தப் பிரச்சினையில் ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பி, பல உயிர்களையும் வளங்களையும் சேதப்படுத்தி மட்டுமே, இதில் எந்த முடிவையும் கண்டுவிட முடியாது.
இந்த விவகாரத்தில், அமெரிக்காவின் தேசிய நலனும் பாதுகாப்பு அடங்கியுள்ளது. இராக்கில் நடக்கும் சண்டை மனித உரிமைகள் அடிப்படையிலானது. இராக்கில் நடந்துக்கொண்டிருப்பது உள்நாட்டு பிரச்சினை, இதனை இராக்கியர்கள் அனைவரும் இணைந்து முடிவினை காண முயற்சி செய்ய வேண்டும்.
எனினும், நாங்கள் தேவையின் அடிப்படையில் தயார் நிலையில் உள்ளோம். இராக்கில் அதற்கான சூழல் ஏற்பட்டால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம். பாக்தாத் எல்லையை ஐஎஸ்ஐஎல் நெருங்கினால், நாங்கள் அவர்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
இராக்கில் தற்போது முன்னேறி வரும் இராக் மற்றும் லெவான்ட் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்ஐஎல்) இயக்கம் மற்றும் பிற ஜிகாதிகள் அமைப்புகளை அடியோடு ஒடுக்க வேண்டும். இந்த இயக்கங்களின் செயல்பாடுகள் எதிர்காலத்திற்கு ஏற்றதாக இல்லை. இந்த இயக்கங்கள் அமெரிக்காவுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகின்றன.
இதுபோன்ற இயக்கங்கள், அவர்களது திறன், நிதி நிலவரம் மற்றும் அவர்களது எண்ணிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவர்களது தரத்தை உயர்த்தி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் அச்சுறுத்த கூடியவர்களாகவே உள்ளனர்" என்றார் ஒபாமா.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இராக்கிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவது என்பது சாத்தியமில்லை. தீவிரவாதப் படைகள், பாக்தாத் பகுதியை நெருங்க முற்பட்டால், அவர்களை நாங்கள் எதிர்ப்போம். ஆனால், உள்நாட்டு பிரச்சினையை இராக் தலைவர்கள் இணைந்து அரசியல் ரீதியான முடிவினை மேற்கொள்ள முன்வர வேண்டும்" என்று கூறினார்.